குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, பின்னர் வாஷிங்மிஷின் தாருங்கள் - கமல்ஹாசன்
மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடையாது. அது கிடைக்க வழி செய்துவிட்டு, அதன் பிறகு வாஷிங்மிஷின் தாருங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை விமர்சித்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் மநீம வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது - பல தேர்தலுக்கு வியூகங்களை வகுத்த கொடுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தன்னுடன் இருக்கிறார்கள்.
ஆறு சிலிண்டர்களை இலவசமாக வழங்க 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமைக்காக, ஒவ்வொரு தமிழன் தலையிலும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
முதலில் நிரந்தரமான, சுகாதாரமான தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, பின்னர் வாஷிங்மிஷின் வழங்கலாம். கடந்த தேர்தலைப்போலவே, இந்த தேர்தலில், இவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றப்போவதில்லை என்றார்.