காற்றிலிருந்து குடிநீர் உருவாக்கும் இயந்திரம் - கொடைக்கானலில் அசத்தல் - மக்கள் வரவேற்பு
கொடைக்கானலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, 5 லிட்டர் தண்ணீருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பானங்கள் பயன்படுத்த அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி நகராட்சி சார்பில், கொடைக்கானலில் 2 இடங்களில் காற்றில் இருந்து குடிநீர் உருவாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. பூங்கா சந்திப்பு, நாயுடுபுரம் போன்ற பகுதிகளில் இந்த எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ. 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த இயந்திரம் பல்வேறு இடங்களில் வைக்கப்படும் என்று கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து ஆணையர் கூறியதாவது -
இத்தண்ணீரை உற்பத்தி திறன், கிருமி நீக்கம் போன்றவை குறித்து ஆய்வு செய்த பின் நகர் பகுதிகளில் இதன் பயன்பாட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரம் பல நகரங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த எந்திரத்தின் மூலம் தினமும் 500 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடியும். குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசிலிருந்து இது தண்ணீரை உற்பத்தி செய்கிறது.
மண்ணில் உள்ளதுபோல படிமங்கள் இல்லாமல் காற்றின் மூலம் தூய்மையான தண்ணீரை இதன் மூலம் பெறலாம். இந்த இயந்திரத்தில் தண்ணீரை சாதாரண நிலை, குளிர்ந்த நிலை, சூடான நிலை என 3 முறைகளில் வினியோகம் செய்யும் வசதி உள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய ரூ.1.80 பைசா மட்டுமே செலவாகிறது. வன விலங்குகள், விவசாய தேவைகளுக்கும் தண்ணீரை உற்பத்தி செய்ய சூரிய சக்தியில் இயங்கும் எந்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.