குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - நீதிபதிகள் கிடுக்கு பிடி
புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மலம் கலந்த குடிநீரை பருகிய குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரட்டை குவளை முறை போன்ற தீண்டாமை கொடுமைகள் தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது மிக முக்கிய பிரச்சனை . குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றனர்.
கவலை தெரிவித்த நீதிபதிகள்
மேலும் நீதிபதிகள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் இரட்டைக்குவளை, கோவிலில் பட்டியலினத்தவர் அனுமதிக்காதது, மலம் கலப்பு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத நபர்கள் தேடப்பட்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மனித உரிமைகள்,சமூகநீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்தனர்.