திருமணத்தில் தடையாக இருந்த சாதி... சுடுகாட்டில் நடந்த திருமணம்...
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலை செய்துக் கொண்ட காதலர்களுக்கு சுடுகாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தின் வேட் எனும் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் அன்று மரக்கிளையில் ஆண் மற்றும் பெண் என இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் அருகில் உள்ள பலாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி முகேஷ் சோனவா, நேஹா தாக்கரே என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அவர்களில் முகேஷ் தனது பெற்றோரிடம் தெரிவித்ததோடு, திருமணம் செய்து தருமாறு கேட்டு நேஹாவின் பெற்றோரையும் அணுகியுள்ளார். இருவருமே ஒரே சாதியை மட்டுமல்ல ஒரே உட்பிரிவையும் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், குறிப்பிட்ட சாதியின் வழக்கப்படி உட்பிரிவில் திருமணம் செய்வது கிடையாது என்பதால் திருமணத்திற்கு இரு வீட்டினரிடையும் எதிர்ப்பு எழுந்தது.
காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை கையில் எடுத்தனர். தங்கள் பிள்ளைகள் திருமணம் செய்ய முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது இருவரின் பெற்றோரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
இதனால் இரு வீட்டாரும் பேசி மயானத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமண சடங்குகளை செய்து பின்னர் இருவரையும் ஒரே குழியில் வைத்து புதைத்தனர்.இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.