தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பயணம் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பரப்புரை பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் கருப்புச்சட்டை போராளிகளின் உழைப்பு வீணாகி விடவில்லை. இதன் அடையாளம் தான் தற்போது நீங்கள் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்தார்.
திராவிடர் கழகத்தினர் தேர்தல் அரசியலுக்கு வரப்போவதில்லை. பட்டம் பதவிகளை எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் அதிகாரத்திற்கு வராமலேயே இன மானம் காக்க கூடிய கருத்தியல் வெற்றியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இந்த திராவிட மாடல் ஆட்சியானது தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக உள்ளதால் நம்முடைய சமூக நீதியை, மாநில சுயாட்சியை இன்று வடமாநிலத்தில் இருக்கக்கூடிய பல தலைவர்கள், முதலமைச்சர்கள், பொதுமக்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
இதுதான் நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய வெற்றி.திராவிட சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக உள்ளது, திராவிட மாடல் என்று சொல்வது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பெரியார் என்ற பெயரை உச்சரித்தாலே சிலருக்கு கோபம் வருகிறது. வெறுப்பை சுமந்து வாழ்பவர்களுக்கு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒட்டியிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
கருப்பையும் சிவப்பையும் யாராலும் எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது. திராவிடர் கழக கொடியிலும் திமுகழக கொடியிலும், ஏன் மதிமுக கொடியிலும் கூட இருப்பது கருப்பும் சிவப்பும் தான். நாங்கள் ஒன்றாக இருப்பவர்கள் அல்ல ஒன்றாக கலந்துவிட்டவர்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.