வரதட்சனை கொடுமை; சகோதரிகள் 3 பேர் பச்சிளம் குழந்தைகளோடு கிணற்றில் குதித்து தற்கொலை..!
சகோதரிகள் 3 பேர் பச்சிளம் குழந்தைகளோடு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஷபியா கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் கலு தேவி 27, மம்தா மீனா 23 மற்றும் கமலேஷ் மீனா 20.
இவர்கள் மூன்று பேரும் ஒரே குடும்பதைச் சேர்ந்த மூன்று சகோதரர்களை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதில் இரண்டு சகோதரிகளுக்கு குழந்தை உள்ளது.மூத்த சகோதரிக்கு 4 வயது குழந்தையும்,2-வது சகோதரிக்கு பிறந்து 27 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையும் உள்ளது.
மூத்த சகோதரி மற்றும் கடைசி சகோதரி கர்ப்பணியாக உள்ளனர். சகோதரிகள் மூன்று பேரையும் கணவர்கள் மற்றும் அவர்களின் வீட்டார் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
சில நேரங்களில் கணவர்கள் சகோதரிகளை அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர் 3 சகோதரிகள்.
கடந்த 25-ந் தேதி சகோதரிகள் மூவரும் தங்களது இரண்டு பச்சிளம் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடியுள்ளனர்.அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் கடந்த 4 நாட்களாக தீவிரமாக தேடியுள்ளனர்.அப்போது நேற்று கிராமத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு 2 பச்சிளம் குழந்தைகளுடன்,சகோதரிகள் 3 பேரும் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளனர்இதைக்கண்டு போலீசார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 குழந்தைகள் உட்பட 5 பேரின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சகோதரிகளில் ஒருவரான காம்லீஸ் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில், நாங்கள் செல்கிறோம், மகிழ்ச்சியாக இருங்கள், எங்கள் மரணத்திற்கு எங்கள் கணவர்களின் குடும்பத்தினர் தான் காரணம்.
தினம் தினம் மரணிப்பதை விட ஒருமுறை மரணிப்பது சிறந்தது. ஆகையால், நாங்கள் இணைந்து சாக முடிவெடுத்துவிட்டோம், நாங்கள் மூவரும் அடுத்த வாழ்க்கையில் ஒன்றாக இருப்போம் என நம்புகிறோம்.
நாங்கள் சாக விரும்பவில்லை ஆனால் எங்கள் கணவர்கள் குடும்பத்தினர் எங்களை துன்புறுத்துகின்றனர். எங்கள் மரணத்திற்கு எங்கள் பெற்றோரை குறை சொல்லாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.
3 சகோதரிகள் அதிலும் 2 பேர் கர்ப்பமாக உள்ள நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.