சென்னைக்கு வருகிறது டபுள் டக்கர் பாலம் : திமுக அரசின் அசத்தல் திட்டம்

goverment tamilnadu dmk doubletuckerbridge
By Irumporai Sep 29, 2021 12:22 PM GMT
Report

சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலையை இரண்டு அடுக்கு பாலமாக அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நேப்பியர் பாலத்தில் இருந்து கோயம்பேடு வரை 16 கிலோமீட்டர் தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. பறக்கும் சாலையின் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மேலடுக்கில் துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அனுமதிக்கப்படும். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பறக்கும் சாலையில் 3 உள்நுழைவுகளும் 3 வெளியேறும் வழிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் படி பறக்கும் சாலைகளில் 7 உள்நுழைவுகளும் 6 வெளியேறும் வழிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் 3 மணி நேரமாக உள்ள கண்டெய்னர் லாரிகளின் பயண நேரம் 30 நிமிடமாக குறையும்.

இது குறித்து பேசிய அமைச்சர் ஏ.வ வேலு, மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. 2010ல் திமுக ஆட்சியில் ரூ.1,815 கோடியாக இருந்த பறக்கும் சாலை திட்ட மதிப்பீடு ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது ரூ.3,004 கோடியாக உயர்ந்தது.

2020இல் பழனிசாமி ஆட்சியில் பறக்கும் சாலை திட்ட மதிப்பீடு ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டது. 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டதால் பறக்கும் சாலை திட்டத்திற்கான மதிப்பீடு தற்போது மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையேயான பிரதான சாலை திட்ட பணிகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது. கூவம் ஆற்றின் கரையோரம் கோயம்பேட்டில் திட்டத்துக்காக நிறுவப்பட்ட தூண்கள் துருப்பிடித்து போய்விட்டன.

முதல்கட்ட பணிகளை ரூ.500 கோடியில் முடிவுற்ற நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது குறித்து அதிமுக அரசு பல்வேறு காரணங்களை கூறியது. 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பறக்கும் சாலை திட்டத்திற்கான வரைபடங்களில் மாற்றம் செய்யும் தமிழக அரசின் கோரிக்கையை என்எச்ஏ ஏற்றது. எனவே, புதியவரைபடங்களின் அடிப்படையில் பறக்கும் சாலைத் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறினார்.