அரக்கோணம் இரட்டைக் கொலை - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – திருமாவளவன்

thirumavalavan double-murder arakonam murder
By Nandhini Apr 14, 2021 09:25 AM GMT
Report

அரக்கோணம் இரட்டைப் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (20). செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான இருவரையும், கௌதம நகர் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர் மற்றும் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எதிர் தரப்பினருக்குச் சொந்தமான நெல் மூட்டைகளையும், டிராக்டரையும் தீ வைத்து கொளுத்தினர். பதற்றம் அதிகமானதால் உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மொத்தம் 8 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளது காவல்துறை. அவர்களில் மதன், அஜித், புலி, குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகவுள்ள மேலும் நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

இந்த கொலைச் சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது கண்டனங்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அரக்கோணம் இரட்டைக் கொலை - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – திருமாவளவன் | Double Murder

சட்டமாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மதுரையில் அவரது திருவுருவ சிலைக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, அம்பேத்கர் சிலை முன்பு விழுப்புரத்தைச் சேர்ந்த ஜோடிக்கு திருமாவளவன் திருமணம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், அரக்கோணம் இரட்டைப் படுகொலையில் முழுமையான விசாரணை நடத்தபடவில்லை. காவல்துறையினர் அறிக்கையில் முக்கிய தகவல்கள் வெளியாகவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.