வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்
பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்
தமிழக அரசு, பொங்கல் பரிசாக, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கனை இன்று முதல் வழங்குகிறது.
இந்த பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஆகிய 2.19 கோடி பேருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசை பெறுவதற்கும் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையின் குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தன் கைவிரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த டோக்கனில் பொங்கல் பரிசை பெறும் நாள் மற்றும் நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் அந்தந்த ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகையில், எந்தெந்த அட்டதாரர்கள் எந்த தேதியில் வந்து பொங்கல் பரிசை வாங்க வேண்டும் என்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.