“ப்ளீஸ்...குடும்பத்தை தொந்தரவு செய்யாதீங்க” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்
அரசியலில் நேருக்கு நேராக மோதிபார்ப்பதை விட்டு விட்டு குடும்பத்தைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார். அதனால், அவரால் கட்சிப் பணியில் முழுவதுமாக ஈடுபடமுடியவில்லை. அதனால் விஜயகாந்தின் மனைவி பிரமேலதா விஜயகாந்த், அவரது விஜயகாந்த் பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். நடைபெற்றுமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவை விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நடத்திவைத்தார். அதன் பிறகு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் நேருக்கு நேரா மோதிப்பாருங்க. ஆனா குடும்பத்த தொந்தரவு பண்ணாதீங்க என்று கூறியதோடு தன் தந்தை நலமாக இருப்பதாகவும், அவரை நான் நன்றாக பார்த்தக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அப்போது மேடையிலேயே கண்கலங்கி அழத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் நாங்கள் இருக்கின்றோம் என்று குரல் எழுப்பி அவரை அமைதிப்படுத்தினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.