மேடையில் பேசும் போது எக்காரணத்தைக் கொண்டும்..நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவு!
அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் தரக்குறைவாக யாரையும் விமர்சிக்கக் கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தவெக தலைவர்
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தவெக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாகச் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என். ஆனந்த்,’’ மக்கள் பணிகளிலும் கட்சி பணிகளிலும் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்று தலைவர் விஜய்யை முதல்வராக்குவதே நமது லட்சியம் எனக் கூறினார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விஜய் உத்தரவு
அதில் ,கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் மேடையில் மைக்கில் பேசும் போது நம் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதி வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் நம் கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் மேடையிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மற்றவர்களைச் சுட்டிக் காட்டி அரசியல் பேசுவதையோ அல்லது மற்றவர்களைத் தாக்குவதைப் போல பேசுவ தையோ தவிர்க்க வேண்டும்.
நம் கழக நிர்வாகிகள், தோழர்கள் எந்த மேடையில் பேசினாலும் அது மக்களின் பிரச்சினைகள் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.