10 ரூபாய் நாணயம் வாங்கவில்லை என்றால் ஜெயில் தண்டனை - ஆட்சியர் உத்தரவு!
ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 ரூபாய் நாணயம் விவகாரம்
நாடு முழுவதும் தற்போது 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. பையில் வைக்கப்படும் ரூபாய் நோட்டுகள் விரைவாக சேதமடைந்து, கிழிந்து விடுவதால், நாணயங்களைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி ஊக்குவித்து வருகிறது.
பெரு நகரங்களில் 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இருப்பினும், இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவது மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக வணிக நிறுவனங்கள், கடைகள், ஆகியவற்றில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
சில மாவட்டங்களில், பேருந்து பயணங்களின் போது 10 ரூபாய் நாணயம் கொடுக்கும் பயணிகளைச் சில நடத்துநர்கள் இறக்கி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்.
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.