சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம் - அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்
எக்காரணம் கொண்டும் சொல்லும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம், இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் அரசு நகரப் பேருந்தில் ஓசி டிக்கெட்டில் பயணம் செய்வதாக கூறியிருந்தார்.
அவரின் பேச்சுக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி தான் விளையாட்டாக சொன்னதாக விளக்கம் அளித்தார்.
பின்னர் கோவை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் இலவச டிக்கெட் வேண்டாம் என்று மறுத்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அவரை வேண்டுமென்றே சண்டை போட வைத்து வீடியோ எடுத்ததாக அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்காரணம் கொண்டும் சொல்லும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம், இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள் என அமைச்சர்களையும், கட்சியினரையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.