தன்னை வளர்த்தவருக்காக மருத்துவமனை முன்பு 4 மாதங்களாக காத்திருக்கும் நாய்!
கேரளாவில் தன்னை வளர்த்தவர் வருகையை எதிர்பார்த்து நாய் ஒன்று 4 மாதங்களாக மருத்துவமனை நுழைவாயிலில் காத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஜமானருக்காக காத்திருக்கும் நாய்
கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை சவக்கிடங்கின் நுழைவு வாயிலில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த நாய் ஒன்று கடந்த 4 மாதமாக காத்துக் கிடக்கிறது. இதுகுறித்து விசாரித்தபோது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இறந்தவருடன் இந்த நாய் வந்ததாக சிலர் கூறுகின்றனர்.
மருத்துவமனையில் நோயாளி இறந்ததும் அவரது உடல் அங்குள்ள சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மற்றொரு நுழைவு வாயிலில், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதை அறியாத அவரது வளர்ப்பு நாய் சவக்கிடங்கு வாயிலில் கடந்த 4 மாதமாக காத்துக் கிடக்கிறது. இதை மருத்துவமனை ஊழியர் ராஜேஷ் என்பவர் கவனித்துள்ளார். முதலில் சில நாட்களாக அந்த நாய் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது.
அதன்பின் சிலர் வழங்கும் பிஸ்கட் மற்றும் இதர உணவு பொருட்களை அந்த நாய் சாப்பிட்டு தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் சவக்கிடங்கு அருகே காத்துக் கிடக்கிறது. அருகில் உள்ள பிசியோதெரபி கட்டிடத்துக்கும் சவக்கிடங்குக்கும் மாறி மாறி அந்த நாய் சென்று வருகிறது. மற்ற தெரு நாய்களுடன் அந்த நாய் சேராமல் தனியாகவே காத்துக் கிடக்கிறது.
தற்போது அந்த நாய்க்கு, அந்த மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் மாய கோபாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குகிறார். முட்டை, மீன் மட்டும் அந்த நாய் விரும்பி சாப்பிடுகிறது.
சாதத்தை அதிகம் சாப்பிடுவதில்லை. அந்த நாய்க்கு ராமு என டாக்டர் மாய கோபால கிருஷ்ணன் பெயர் வைத்துள்ளார்.அந்த நாயை வளர்க்க கண்ணூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்வந்துள்ளதாக மருத்துவர் மாய கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தான் விசுவாசத்திற்கு பெயர்
விசுவாசத்துக்கு பெயர் ‘ஹச்சிகோ': ஜப்பானில் விசுவாசத்துக்கு பெயர் போன் ஹச்சிகோ என்ற அகிதா இன நாய், தனது எஜமானரான பேராசிரியரை தினமும் ரயில் நிலையம் வரை கூட்டிச் சென்று விட்டு, மாலையில் மீண்டும் திரும்பி வந்து அவரை வீடு வரை அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தது.
பணியாற்றும் இடத்தில் பேராசிரியர் மாரடைப்பால் இறந்து விட்டார். அது தெரியாமல் ஹச்சிகோ நாய், தினமும் ரயில் நிலையம் வரை சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தது.
இந்த நாய் கதைகள், திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. அதுபோல், ‘ராமு’ என்ற நாயை கேரளாவின் ஹச்சிகோ என அழைக்கின்றனர்.