வளர்த்தவர் இறந்தது தெரியாமல் 3 மாதங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் நாய்
நாய் ஒன்று தன்னை வளர்த்தவர் இறந்தது தெரியாமல் 3 மாதங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் சம்பவம் காண்போரை கண்கலங்க செய்கிறது.
மாரடைப்பால் உயிரிழப்பு
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் நாமக்கல்,கிருஷ்ணகிரி ,தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
3 மாதங்களாக காத்திருக்கும் நாய்
உயிரிழந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடன் அவரது வளர்ப்பு நாயும் வந்துள்ளது. உயிரிழந்த நபரின் சடலத்தை அவரது உறவினர்கள் பெற்று சென்ற நிலையில் அவர் உயிருடன் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று நினைத்து அந்த நாய் அவசர சிகிச்சை அறை முன்பாக அமர்ந்து தன்னை வளர்த்தவருக்காக காத்திருக்கிறது.
நாய் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வாயிலில் காத்திருப்பதை பார்த்த காவலர்கள் நாயை விரட்டிய நிலையிலும், நாய் அந்த இடத்தை விட்டு போகாமல் தனது எஜமானார் வருவார் என்று அசட்டுத்தனமான நம்பிக்கையில் காத்திருக்கிறது.
வளர்த்தவர் மீது நாய் வைத்துள்ள பாசத்தை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் நாய்க்கு அவ்வப்போது உணவுகள் வழங்கி வருகின்றனர்.
ஏக்கத்துடன் மருத்துவமனையில் நாய்
நாயை வளர்த்தவர் 3 மாதங்களுக்கு முன் இறந்தால் நாய் யாருடன் வந்தது என்பது தெரியவில்லை. மேலும் இறந்தவரின் உறவினர்களும் நாயை அழைத்துச் செல்ல இதுவரை வரவில்லை.
இந்த நிலையில் தன் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் அவர் தன்னை வந்து அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் தினம் தோறும் வாசலில் ஏக்கத்துடன் காத்திருக்கிறது நாய்.