தையல் ஊசி மூலம் விபரீத தற்கொலை முயற்சி - கோவை பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
கோவையில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் கழுத்தில் 8 செமீ தையல் ஊசியை குத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கழுத்தில் படுகாயங்களுடன் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அந்த பெண் விஷம், தூக்கு, கழுத்தை அறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் சுமார் 8 சென்ட்டி மீட்டர் நீளம் உள்ள தையல் ஊசியை எடுத்து கழுத்தில் குத்திக்கொண்டுள்ளார்.
இதனால் அதிகளவு இரத்தம் வெளியேற தகவல் அறிந்த உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு முதலில் முதலுதவி அளித்த மருத்துவர்கள் பின்னர் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தப் பின்னர் தான் கழுத்துப் பகுதியில் தையல் ஊசி இருப்பது தெரிந்தது.
மேலும் ஊசி கழுத்தில் மூச்சுக் குழாயில் இருந்து கழுத்து தண்டு பகுதியில் மூளைக்கு செல்லும் முக்கியமான ரத்தக்குழாய் அருகில் இருந்துள்ளது. இதுகுறித்து அப்பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் எப்படியாவது இறந்துவிடவேண்டும் என்பதற்காக தையல் ஊசியை குத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தையல் ஊசி இருக்குமிடம் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தின் அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது மிக ஆபத்தாக கூட அமையலாம் என மருத்துவர்கள் கருதினர். இதையடுத்து காது, மூக்குத் தொண்டை, மூளை தண்டுவடம், ரத்த நாளம், மயக்கவியல் சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றுவது எப்படி என ஆலோசனை செய்தனர்.
பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் முதலில் கழுத்தில் இருந்து தண்டுவட எலும்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் மூச்சுக் குழாயில் இருந்து தண்டுவடத்தின் வழியாக கழுத்தின் பின்புறம் சென்றுகொண்டிருந்த ஊசியை நவீன சிஆர்ம் எக்ஸ்ரே கருவி மூலம் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த ஊசி மெதுவாக வெளியே எடுக்கப்பட்டது.
4 துறையை சேர்ந்த மருத்துவர்களின் தீவிர அறுவை சிகிச்சையால் பெண்ணின் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் மற்றும் தண்டுவடப் பகுதி நரம்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தற்போது அவர் காப்பாற்றப்பட்டு நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் தெரிவித்தனர். அவர்களை மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டினார்.