மருத்துவர்களின் புரியாத மருந்து சீட்டு கையெழுத்து - குட்டு வைத்த உயர் நீதிமன்றம்!
மருத்துவர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவது தொடர்பாக ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வழக்கு
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை.
இதனால் அந்த மருத்துவரை ஆஜராகும்படி, நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி உத்தரவிட்டார். இதனையடுத்து மருத்துவர் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையயில் பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி உத்தரவு
அதில் நீதிபதி கூறியதாவது "அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.