அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை...நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் மொத்தம் 110 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 20 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை.
மருத்துவமனைக்கு நாள்தோறும் 500 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வரும் நிலையில், நாள்தோறும் 200 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
ஆனால் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் வாலாஜா, சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு அவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
அதேசமயம் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் பலரும் மருத்துவர்கள் பற்றாக்குறையாலும் போதிய உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமலும் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த கொரோனா நோயாளியின் உறவினர்கள் சுமார் ரூ.30 ஆயிரம் வரை கடன் பெற்று வெளியில் மருந்து வாங்கி கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லையென வருத்தம் தெரிவித்தனர்.
எனவே அரசு மருத்துவ மனைக்கு உடனடியாக மருத்துவர்களை நியமிக்கவும் உயிர்காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்கள்.