8 ஆண்டுகளுக்கு பிறகு வந்த அதிரடி தீர்ப்பு! இரண்டேகால் ஏக்கர் நிலத்திற்காக கொல்லப்பட்ட மருத்துவர்!
தமிழகத்தின் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கோரசம்பவம், அப்போது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்று 8 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று குற்றவாளிகள் 9 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு நரம்பியல் துறை மருத்துவராக 5,000 அறுவைசிகிச்சைகளுக்குமேல் செய்து புகழ்பெற்றவர் மருத்துவர் சுப்பையா. கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு தான் சுப்பையாவின் பூர்விகம். இவரின் தாய்மாமன் பெருமாள் நாடாருக்கு காது, வாய் செயலிழந்து விட்டதோடு குழந்தையும் இல்லை.
இந்த நிலையில், அன்னப்பழம் என்பவரை இரண்டாம் தாரமாக அவர் திருமணம் செய்துகொள்கிறார். திருமணமான சிறிது காலத்திலேயே பெருமாள் நாடாரை உதறிவிட்டு ஓடிய அன்னப்பழம், மூன்று வருடங்கள் கழித்து கையில் ஒரு குழந்தையுடன் திரும்பி வந்துள்ளார். ‘தனக்கும் குழந்தைக்கும் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று அன்னப்பழம் கொடி பிடிக்க, இதை ஏற்க மறுத்துள்ளார் பெருமாள் நாடார். இந்தப் பிரச்னை தொடங்கும்போதே தனது சொத்தையெல்லாம் தன் சகோதரி அன்னக்கிளியின் பெயரில் பெருமாள் நாடார் எழுதி வைத்துவிடுகிறார். அதில் ஒன்றுதான் அஞ்சுகிராமத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலம்.
இந்தச் சொத்து யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அன்னக்கிளி தரப்பும் அன்னப்பழம் தரப்பும் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்திவருகின்றன. அன்னப்பழத்தின் மகன் பொன்னுசாமியும், அன்னக்கிளியின் மகன் மருத்துவர் சுப்பையாவும் வழக்கு நடத்தும் அளவுக்கு அடுத்த தலைமுறைக்கும் பிரச்சனை தொடர்கிறது.
ஒருகட்டத்தில் அந்த நிலத்தை தன் மனைவி மேரி புஷ்பத்தின் பெயரில் பொன்னுசாமி செட்டில்மென்ட் எழுதிக் கொடுக்கிறார். 2013-ம் ஆண்டு அரசு மருத்துவர் பணியிலிருந்து சுப்பையா ஓய்வுபெற்ற பிறகு, முழுமூச்சாக தனது நிலத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்குகிறார் சுப்பையா.
அப்போது புதிதாக அமைக்கப்பட்டிருந்த நில அபகரிப்புப் பிரிவில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தையும் நாடுகிறார். இந்த நிலையில்தான் சுப்பையா கொலைசெய்யப்படுகிறார். 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் சுப்பையாவை, கூலிப்படையினர் வெட்டிச் சாய்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பையா, செப்டம்பர் 23-ம் தேதி உயிரிழந்தார்.
மருத்துவமனை வெளியே இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் கோரமான கொலைச் சம்பவக் காட்சிகள் மீடியாக்களில் ஒளிபரப்பாகி தமிழகத்தை அதிரச்செய்தன. அதையடுத்து, ஏற்கெனவே சுப்பையா அளித்திருந்த புகார்களின் அடிப்படையில் பொன்னுசாமியும் அவரின் மனைவி மேரி புஷ்பமும் கைதுசெய்யப்பட்டனர்.
பொன்னுசாமியின் மகன்கள் வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பேசிலின் நண்பர்களான வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் அனைவரும் பின்னாளில் கைதுசெய்யப்பட்டனர்.
2017-ம் ஆண்டில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக விஜயராஜ் வந்த பிறகு, சாட்சிகள் விசாரணை சூடுபிடித்தது. அப்ரூவராக மாறிய ஐயப்பன் அளித்த வாக்குமூலம்தான் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. ஐயப்பன் அளித்த வாக்குமூலத்தில், ‘வள்ளியூரைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், வட்டிக்குவிடும் தொழிலையும் நடத்திவந்தார்.
அவருக்கு வட்டி வசூலித்துக் கொடுக்கும் வேலையை நான், முருகன், செல்வபிரகாஷ் மூவரும் செய்துவந்தோம். வழக்கறிஞர் வில்லியம்ஸ் மூலம் ஜேம்ஸ் சதீஷ்குமாருக்கு வழக்கறிஞர் பேசில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தார். அவர், தனது அஞ்சுகிராம சொத்துப் பிரச்னை தொடர்பாக ஜேம்ஸ் சதீஷ்குமாரிடம் பேசினார்.
டாக்டர் சுப்பையாவைக் கொன்றுவிட்டால், அந்தச் சொத்தை இருவரும் பங்குபோட்டுக் கொள்ளலாம் என்று பேசி முடிவெடுத்தனர். இதற்கு பொன்னுசாமியும் மேரி புஷ்பமும் ஒப்புக் கொண்டனர். மேலும், மூவரும் தப்பிச் செல்லும்போது, எங்கள் பல்சர் பைக் ரிப்பேராகிவிட்டது. வண்டியை ஓரமாகப் போட்டுவிட்டு, மூவரும் ரயில் மூலம் மும்பை சென்றோம்.
எங்கள் மூவருக்கும் வழக்கறிஞர் பேசிலிடம் சொல்லி 50 லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாக டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் கூறியிருந்தார். அந்தப் பணத்தை வாங்குவதற்காக சென்னை வந்தபோதுதான் போலீஸிடம் மாட்டிக்கொண்டோம்’ என்று கூறியுள்ளான்.
இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
குற்றாவாளிகளான 9 பேரில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், அப்ரூவரான ஐயப்பனுக்கு தண்டனை கிடையாது என்றும் உத்தரவிட்டுள்ளது.