உச்சி வெயிலில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு - எதனால் ஏற்பட்டது?
வெயிலில் கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்ததை குறித்து மருத்துவர் விளக்கமளித்தார்.
இளைஞர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் வெயிலில் கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து மருத்துவர் ஒருவர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சி வெயிலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார்.இது "வெப்ப வாதம்" எனும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதால் நிகழ்ந்த மரணம் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் கோடை காலங்களில் வெப்ப அளவுகள் 40 டிகிரிக்கு மேல் நிலவுவது வழக்கமாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்தின் விளைவாக உடல் சூடு அதிகமாகி வெப்ப வாதம் ஏற்பட்டு மருத்துவ ரீதியான அவசர சூழ்நிலை ஏற்பட்டு முறையான கவனிப்பற்ற நிலையில் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணிபுரிபவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியிருப்பவர்கள் என பலரும் போராடி வருகின்றனர்.
எதனால் ஏற்பட்டது?
இந்த வெயிலை சமாளிப்பதற்கு உடற் தகுதியை நம்மால் அடைய முடியும்.இதற்கு "வெப்பத்தை தாங்கும் பயிற்சி" அவசியம். ஒருவர் நல்ல வெயிலில் தினமும் நான்கு மணிநேரம் விளையாடவோ, பணிபுரியவோ, பயணம் செய்யவோ வேண்டும் என்றால் அவர் நேரடியாக எந்த முன்பயிற்சியும் இல்லாமல் நான்கு மணிநேரம் விளையாடுவாரானால் வெப்ப அயர்ச்சி உள்ளாகி பாதிப்புக்குள்ளாவர்.
இதற்கு அவர் குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் கடும் வெயில் சூழ்நிலையில் மொத்தம் பணிபுரிய வேண்டியது ஐந்து மணிநேரம் இதை 100% என்று கொள்ளவும். முதல் நாள் 20% நேரம் மட்டும் அதாவது ஒரு மணிநேரம் மட்டும் தனது பணியை கடும் வெயில் சூழலில் செய்ய வேண்டும்.
பிறகு நீர் மற்றும் உப்புச் சத்து நிரம்பிய ஓ ஆர் எஸ் ( உப்புக் கரைசல்) பருக வேண்டும். உணவை முறையாக உண்ண வேண்டும். இரண்டாம் நாள் 40% -இரண்டு மணிநேரம் என்ற அளவில் வெயிலில் பணிநேரத்தை உயர்த்த வேண்டும். பிறகு ப்ரேக் எடுக்க வேண்டும்.
மூன்றாவது நாள் 60% நேரம் அதாவது மூன்று மணி நேரம் என்ற அளவில் வெயிலில் வேலை செய்ய வேண்டும். நான்காவது நாள் 80% நேரம் அதாவது நான்கு மணிநேரம் என்ற அளவில் வெயிலில் வேலை செய்ய வேண்டும். ஐந்தாவது நாள் தான் பணிபுரிய வேண்டிய ஐந்து மணிநேரமும் 100% வேலை செய்ய வேண்டும்.