தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர் - அடுத்து நடந்தது என்ன?
காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்கை மருத்துவர் தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெவிக்விக் மருத்துவம்
உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள ஜக்ருதி விஹார் காலனியில் சர்தார் ஜஸ்பிந்தர் சிங்கின் குடும்பம் வசிக்கிறது. சம்பவத்தன்று அவரது இரண்டரை வயது மகன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் டேபிளின் விளிம்பில் மோதியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனையடுத்து குழந்தையை உடனடியாக அருகிலுள்ள பாக்யஸ்ரீ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது பணியில் இருந்த மருத்துவர், தையல் போடுவதற்குப் பதிலாக, ஃபெவிக்விக் எடுத்து காயத்தில் தடவினார். காயத்தில் பசை தடவியவுடன், குழந்தை வலி தாங்க முடியாமல் அழத் தொடங்கியது. பெற்றோர்கள் மருத்துவர்களிடம் இது குறித்து கேட்டபோது, குழந்தை பதற்றமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வலி குறையும் என்றும் தெரிவித்துள்ளது.
டாக்டர் அலட்சியம்
வலி குறையாததால், சிறுவனை லோக்ப்ரியா மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். குழந்தைக்கு அங்கே சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காயத்தில் ஒட்டும் பசை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை அகற்ற 3 மணி நேரம் ஆனது.

பின்னர், காயம் சுத்தம் செய்யப்பட்டு, அதன் மீது 4 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து புகாரின் பேரில் மீரட் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் அசோக் கட்டாரியா,
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தபின்னர், தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.