நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

M K Stalin DMK
By Thahir Sep 26, 2022 10:28 AM GMT
Report

மக்களுக்கான பணியைக் கவனிப்போம்..நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுக்களைத் தவிர்ப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, இந்த கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன் தான் திராவிட முன்னேற்றக் கழத்தை பேரறிஞர் அண்ணா தொடங்கினார்.

நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை | Do Not Allow Toxic Politics Mk Stalin Statement

கலைஞர் அதனை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே லட்சியப் பாதையில் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தருகிற இயக்கமாக, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கின்ற முனைப்புடன் செயல்பட கூடிய இயக்கமாக கட்டியமைத்தார்.

அவர்களுடைய பாதையில்தான் இந்த திராவிட மாடல் அரசு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் இன்றைக்கு நம்முடைய ஆட்சிமுறை மிகச் சிறப்பான வகையில் அமைந்திருப்பதை ஏடுகள் பலவும் பாராட்டுகின்றன. ஊடகங்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை | Do Not Allow Toxic Politics Mk Stalin Statement

அதே நேரத்தில் இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

பத்து ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆட்சிப் பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் நாள்தோறும் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கிறது.

அந்த உழைப்பின் மூலமாக நிறைவேற்றப்படுகின்ற திட்டங்கள் கடைசி குக்கிராமம் வரை ஒவ்வொருவரையும் போய்ச் சரியாகச் சேர வேண்டும் என்ற அக்கறையுடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் நம்முடைய கழகத்தின் நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகளிலும் அல்லது பொது நிகழ்ச்சிகளிலும் பேசக்கூடிய செய்திகளைத் திரித்து, மறைத்து, வெட்டி - ஒட்டி, மோசடி செய்து வெளியிடக்கூடிய கூட்டத்தின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதனை அந்த நச்சு சக்திகள் ஒரு தொடர் வேலையாகவே மேற்கொண்டு செய்து வருகின்றன. "மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் சொல்வார்.

அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன.

மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. அதற்காகக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

நம்முடைய பயணம் நெடியது. நமக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அடிக்கடி சொல்வதுபோல அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால் வேகமாகச் சுழல்கிறார்கள். நாம் கையில் ஆட்சி - மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம்.

ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது.

நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். பொறுப்புடன் நடப்போம். நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவோம்.

அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அவை பற்றி நாம் பேசுவதைவிட, பயன்பெற்ற மக்கள் பேசுவார்கள். அவர்களே இந்த நச்சு சக்திகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். அந்தப் பொறுப்பை உணர்ந்து நம் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்” எனக் கூறினார்.