பள்ளியில் நடனம் கற்றுக்கொடுத்து,15 வயது சிறுமியை கர்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது
நடனம் சொல்லி கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நைனாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெள்ளாண்டிவலசு காந்தி நகரைச் சேர்ந்த 24 வயது சரவணன் என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி படித்து வரும் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்காக அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்திருக்கிறார் சரவணன்.
அந்த பழக்கத்தில் மாணவியின் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடமும் நட்பாக பழகி உள்ளார். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவி திடீரென்று மாயமானார்.
காலையில் எழுந்து பார்த்தபோது மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர்.
இதையடுத்து தங்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற டான்ஸ் மாஸ்டர் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
இதனிடையே மாயமான மாணவியுடன் சரவணன் எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதால் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவித்தார்.
மாணவி மைனர் என்பதால் இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சந்திரலேகா விசாரணை நடத்தினார்.
விசாரணையில் நடனம் கற்றுக் கொடுக்கும்போது நெருங்கி பழகி, வீடுவரை வந்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததால் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி சரவணன் வெளியில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சேலம் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.