வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

Udhayanidhi Stalin Tamil nadu Election
By Vinoja Mar 24, 2026 08:26 AM GMT
Report

மேற்கு மண்டலத்தில் அடுத்த 32 நாள்களும் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க இளைஞரணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க-வின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கோவை மற்றும் நீலகிரியைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகளுடன்  நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் | Dmk Youth Wing Executives Consultative Meeting

கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில்,  உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகையில், “இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

டெல்லி தே.ஜ கூட்டணி, தமிழ்நாட்டிற்கு இழைத்த துரோகங்கள் குறித்து மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும். அடுத்து வரும் 32 நாள்களும் தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த செயல்வீரர்கள் அயராமல் பாடுபட்டு, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய உழைக்க வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.

வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் | Dmk Youth Wing Executives Consultative Meeting

உதயநிதியைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு, மேற்கு மண்டலத்தில் இருந்து தி.மு.க இளைஞரணி கூட்டத்தை உதயநிதி தொடங்கியிருக்கிறார்.

அதேபோல தி.மு.க-வின் வெற்றியையும், மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்க வேண்டும். கடந்த தேர்தலை போன்று இல்லாமல் இம்முறை தி.மு.க-வின் கோட்டையாக மேற்கு மண்டலத்தை மாற்றி காட்டவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.இ.பிரகாஷ், துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் கரூர் - திருப்பூர் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.