தற்கொலைக்கு முயன்ற திமுக பெண் கவுன்சிலர்.. அந்த 3 பேர் தான் காரணம்...
விருதுநகரில் திமுக பெண் கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த விருதுநகர் நகராட்சி தேர்தலில் 5வது வார்டில் ஆஷா என்பவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே பொது இடத்தில் வைத்து தன்னை ஆபாசமாகப் பேசியதாக மேனகா, மாரீஸ்வரி, கலைச்செல்வி ஆகிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஷா சில நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல்நிலையம் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கவுன்சிலர் ஆஷா நேற்று தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்கொலை முயற்சிக்கு முன்பு கவுன்சிலர் ஆஷா வெளியிட்ட ஆடியோவில் 5வது வார்டு “பொதுமக்களுக்கு.. நான் ஆஷா பேசுறேன். அக்கா.. அண்ணே.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தாலோ, யாருக்காவது ஏதாவது செய்யாமல் இருந்தாலோ, டைரக்டா நீங்க என்கிட்ட கேளுங்க.
ரொம்பப் பேரு நான் கஷ்டப்படற அளவுக்கு நடந்துக்கிறாங்க. என்னை அசிங்கப்படுத்துறாங்க. ரொம்ப மனஉளைச்சல்ல இருக்கேன். என்னால முடியல. என்கிட்ட வேணும்னே சண்டை இழுக்கிறாங்க. என்னைக் கோபப்படுத்தி சண்டை போடற அளவுக்கு நடந்துக்கிறாங்க. நான் யார்கிட்டயும் தேவையில்லாம எந்தப் பிரச்சனைக்கும் போகல.
என்னை வச்சு சண்டை போட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. எல்லா வீட்லயும் ஏறி, இறங்கித்தான் ஓட்டு கேட்டேன். என்னை ஜெயிக்க வச்சீங்க. இப்ப, நான் என்ன செய்யிறதுன்னு தெரியாத நிலையில இருக்கேன். தாங்க முடியாத அளவுக்கு வேதனையா இருக்கு. நான் தப்பா பேசிருந்தா, என்னை மன்னிச்சிருங்க” என தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆஷாவின் அம்மா பொதுமக்களிடம் சீட்டு பிடித்து வந்ததாகவும், அவரிடம் சீட்டுக்குப் பணம் செலுத்திய சிலருக்கு பணம் திரும்பக்கிடைக்காத நிலையில் வீட்டுக்கு வந்து அவர்கள் பணம் கேட்டு திட்டியிருக்கின்றனர் என கூறப்படுகிறது. மறுபுறம் ஒரு தரப்பினர் உள்ளாட்சி தேர்தலின்போது விருதுநகரில் 36 வார்டுகளிலும் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. ஓட்டுக்கு ரூ.500 முதல் 2 ஆயிரம் வரை புரண்டது. அதேபோல் ஆஷா வார்டான 5 வது வார்டிலும் பணம் புரண்டது. அந்த பணம் எல்லாம் கடன் வாங்கி செலவழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதாலும் ஆஷா மனமுடைந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.