தி.மு.க. வெற்றி பெறுவதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது- துரைமுருகன்
''டீ குடித்து விட்டு, இரவு முழுதும் பணியாற்றுபவன்தான்யா தி.மு.க.காரன்'' என தி.மு.க. பொதுச் செயலர் துரைமுருகன் பேசியுள்ளார். வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகர், சேண்பாக்கம் பகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்டு துரைமுருகன் பேசுகையில், பல தேர்தல்களை பார்த்த நான் இரவு, பகல் பாராமல் தொகுதியை சுற்றி தேர்தல் வேலைகளில் ஈடுபடுவேன். இத்தேர்தல் அப்படி கிடையாது. கட்சியின் பொதுச் செயலராக உள்ளதால் தென் மாவட்டங்களில் தேர்தல் பயணம் செய்ய வேண்டும்.

இதனால், ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி, பணியாற்றுவதாக ஒப்புதல் அளித்திருக்கிறீர்கள். பூத் கமிட்டியினர், 100 ஓட்டுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். ஒரு டீ குடித்து விட்டு இரவு முழுதும் வேலை செய்பவன் தி.மு.க.,காரன் மட்டும் தான்.
பண பலம், படை பலத்தை ஆளும் கட்சியினர் காட்டலாம். அதை தவிடுபொடியாக்கும் வல்லமை தி.மு.க.,வுக்கு இருக்கிறது. தி.மு.க. வெற்றி பெறுவதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.