காங்கிரஸ் தொகுதியைப் பறிக்கும் திமுக - அரசருக்கு நேரு வைக்கும் அடுத்த செக்
திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திருநாவுக்கரசருக்கு மீண்டும் தொகுதி கிடைக்க விடாமல் செய்த அமைச்சர் நேரு அறந்தாங்கி தொகுதியை முன்வைத்து திருநாவுக்கரசருக்கு மீண்டும் ஒரு செக் வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
களமிறங்கிய நேரு
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மண்டலப் பொறுப்பாளர்களை நியமித்து வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது திமுக. திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல பொறுப்பாளராக மூத்த அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவை நியமித்திருக்கிறது திமுக தலைமை.
தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சியினருடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார் நேரு. அதன் ஒரு அங்கமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த நேரு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் கருத்து ஒன்றை ஆமோதித்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியை கடந்த மூன்று தேர்தல்களாக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி வருகிறது திமுக. 2011ல் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்ட நிலையில் 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் அவரது மகன் ராமச்சந்திரன் போட்டியிட்டார்.
2016ல் வெற்றி வாய்ப்பை இழந்த ராமச்சந்திரன் 2021ல் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். அறந்தாங்கி தொகுதி தொடர்ச்சியாக கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுவது அந்தப் பகுதி திமுகவினரை சோர்வடையச் செய்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு திமுக சார்பில் உதயம் சண்முகம் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றார்.
திருநாவுக்கரசருக்கு செக்
2011ல் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போது சிட்டிங் எம்.எல்.ஏவாகவே அதிமுகவில் இணைந்தார். சில ஆண்டுகளிலேயே மீண்டும் திமுகவில் இணைந்த அவர் அறந்தாங்கி தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
அறந்தாங்கி சட்டப்பேரவை சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியும் கடந்த இரண்டு தேர்தல்களாக கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கபட்டு வருகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 2026ல் அறந்தாங்கி தொகுதியில் திமுக போட்டியிடவில்லையென்றால் அறிவாலயத்தை முற்றுகையிட்டு தற்கொலை போராட்டம் நடத்துவோம் என பேசியிருந்தார் உதயம் சண்முகம்.
நேரு மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரிடமும் இதனை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர். இதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றிருக்கிறார் நேரு. திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த போதே நேருவுக்கும் திருநாவுக்கரசருக்கும் பிரச்னை உருவாகியிருந்தது.
2024 தேர்தலில் திருநாவுக்கரசருக்கு சீட் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே திருச்சி தொகுதியை மதிமுக பக்கம் நேரு தள்ளிவிட்டதாக கூறப்பட்டது. வைகோவிடமே, ”தம்பியை என்னை நம்பி நிற்க வையுங்கள்; ஜெயிக்க வைக்கிறேன்” என கூட்டணி பேச்சு வார்த்தையில் நேரு சொன்னதாக தகவல்கள் வெளியாகின.
திருநாவுக்கரசரை தட்டி விட்ட நேருவிடமே அவர் மகன் கணக்கையும் கொடுத்திருக்கிறார்கள் புதுக்கோட்டை திமுகவினர். தந்தையை எம்.பி ஆகவிடாமல் செய்த நேரு மகனை எப்படி டீல் செய்யப் போகிறார் என்ற கேள்வி திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட திமுகவினரிடம் எழுந்திருக்கிறது.