ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற திமுக எடுக்கும் அதிரடி முடிவு

DMK R. N. Ravi
By Thahir Nov 02, 2022 09:24 AM GMT
Report

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி திமுக கூட்டணி கட்சிகளுடன் குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு 

தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதாக திமுக கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டையும், கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநரின் கருத்துக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

அந்த அறிக்கையில் சனாதனம், திராவிடம், பட்டியலின மக்கள் மற்றும் திருக்குறள் குறித்து ஆளுநர் கூறும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன என விமர்சிக்கப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டம் 

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் திமுக மனு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DMK takes action to get Governor RN Ravi back

இது குறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தரப்போகும் மனுவில் உள்ள குறிப்பாணையை படித்துவிட்டு கையெழுத்திட வருகின்ற 3ம் தேதிக்குள் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு அளிக்க உள்ள மனுவில் தமிழக ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்.

கூட்டுறவு சட்ட திருத்தம், நீட் உள்ளிட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 20 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் திருப்பி அனுப்பியும், கிடப்பில் போட்டும் மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளை, மாண்புகளை புண்படுத்துகிறார்.

அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என்கிறார்.

அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டியவர், அதன்படி நடக்க வேண்டியவர் சனாதன தர்மம் பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.