‘சொன்னால் கேட்க மாட்டீர்களா?’ - தொண்டர்களை கண்டித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பேனர் கலாச்சாராத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பம் நட முயன்றபோது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 13 வயதான சிறுவன் தினேஷின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்த பின்னும் விரும்பத்தகாத செயல்கள் தொடர்வது வருத்தமடைய வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரில் பங்கேற்று துணை நிற்பதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுப்பதே சிறுவனுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை, கட்டளையாக ஏற்று திமுகவினர் செயல்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.