"நேற்று முளைத்த காளான்" – மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "காங்கிரஸை விமர்சித்தாலோ, தாக்கினாலோ திருப்பி பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்த நிலையில், அதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக பதிலளித்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதி பதில்
நேற்று (ஜூன் 29) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர், தனது உரையில், "எனக்கு யாருடனும் தனிப்பட்ட பகை இல்லை. எங்களை அமைதியாக விட்டுவிட்டால், நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்வோம்.

ஆனால், எந்தக் கட்சியாக இருந்தாலும் காங்கிரஸை தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம். திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸைத் தாக்கினால் திருப்பி பதிலடி கொடுப்போம். காங்கிரஸை நக்கல், நையாண்டி செய்வதையோ, துரோகி என்று கூறுவதையோ ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலளித்தார்.

மாணிக்கம் தாகூரின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, "மாணிக்கம் தாகூரைவிட பெரிய தலைவர்களான பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரை பார்த்தவர்கள் நாங்கள். இவர் யார்? நேற்று முளைத்த காளான். வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்.
நேருவே எங்களைக் கண்டு பயந்து ஓடிய காலங்களும் இருக்கின்றன. அப்போது இவர் பிறந்திருக்கக்கூட மாட்டார். புதிதாக வந்தவர்கள் ஆரம்பத்தில் இரண்டு, மூன்று நாட்கள் இப்படிப் பேசுவார்கள்; பின்னர் அடங்கிவிடுவார்கள்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.