தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் - சென்னையில் பரபரப்பு
சென்னையில் தலை துண்டித்து திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி பேசின் பாலம் சாலையை சேர்ந்த சக்கரபாணி(65) என்பவர் திமுகவின் ஏழாவது வட்ட பிரதிநிதியாக உள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள வியாபாரிகள், மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மணலி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு குடியிருந்த ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததால் அதனை வாங்குவதற்காக கடந்த மே 10 ஆம் தேதி வீட்டில் இருந்து சக்கரபாணி வெளியில் சென்றுள்ளார். ஆனால் சென்றவர் திரும்பி வரவில்லை என அவரது குடும்பத்தினர் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
4 நாட்களாக போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சக்கரபாணியின் செல்போன் சிக்னலை வைத்து ராயபுரத்தில் உள்ள க்ரேஸ் கார்டன் மூன்றாவது சந்து பகுதியில் தான் கடைசியாக சிக்னல் இருந்ததாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தமீம் பானு என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு சக்கரபாணியின் தலையை துண்டாக வெட்டி உடலை மட்டும் கவரில் போட்டு மூடி வைத்து இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ராயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக நடந்த விசாரணையில் தமீம் பானுவிற்கும் சக்கர பாணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தமீம் பானு வீட்டை காலி செய்து ராயபுரம் பகுதியில் வந்து குடியேறியதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆம் தேதி ராயபுரத்தில் உள்ள தமிம் பானுவின் வீட்டிற்கு சக்கரபாணி வந்து இருந்தபோது அவரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட தமிம் பானுவின் தம்பி பாஷா அருகிலிருந்த அருவமனையைக் கொண்டு தலையை துண்டாக வெட்டியதும் தெரியவந்துள்ளது.
தலையை சாக்குமூட்டையில் வைத்து அடையாறு பகுதியில் உள்ள ஆற்றில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிம்பானு மற்றும் அவரது தம்பி வாசிங் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் கீழ் வீட்டில் குடியிருக்கும் ஆட்டோ டிரைவர் டில்லி பாபு என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.