நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக - தொண்டர்கள் மகிழ்ச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் மற்றும் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் தனித்து போட்டியிட திமுக வழக்கம்போல தனது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் திமுக சார்பில் முதல் மற்றும் 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம், திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணைநல்லூர், அரகண்டநல்லூர் பேரூராட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் தஞ்சை வடக்கு மற்றும் மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வேலூர் கிழக்கு மற்றும் மத்திய மாவட்டம், திருநெல்வேலி கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது.