திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அனுமதி மறுப்பு
திமுக மாணவரணி சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
அனுமதி மறுப்பு
மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
ஆனால் குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவர் விளக்கமளித்திருந்தார்.

இருப்பினும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாணவரணி அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் இன்று காலை ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார், முறையான அனுமதி பெறவில்லை என்பதால் மேடை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

பொது இடங்களில் போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்பே மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
இதனால் திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவரணி நிர்வாகிகளை போலீசார் காவல் துறை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.