ரூ.5 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி திமுக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

1 week ago

திருவாரூரில் ரூ.5 கோடி சொத்துக்களை திமுக பிரமுகர் அபகரிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, 18 புதுக்குடி பிரதான சாலையில் கணவரை இழந்த உஷா தன் மகள்களுடன் வசித்து வருகிறார். இதனிடையே உஷாவின் கணவர் ராஜேந்திரனின் சகோதரர் கல்யாணசுந்தரம் உஷா குடும்பத்திற்கு சேரவேண்டிய நிலங்கள், வாழை மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளிட்ட சுமார் '5 கோடி' மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் இதுவரை கல்யாணசுந்தரம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. உஷாவின் கணவரான ராஜேந்திரனுக்கு மூத்த சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர். ஒரு காலகட்டத்தில், குடும்பத்துக்குள்ளேயே வாய்மொழியாக சொத்துக்களை அவரவர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளனர்.

ராஜேந்திரன் குடும்பத்தினர் கடந்த 35 வருடமாக அனுபவத்தில் மட்டுமே சொத்துக்களை வைத்துள்ளனர். தற்பொழுது, ராஜேந்திரன் மற்றும் அவரது மூத்த சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், இது நாள்வரையிலும் ராஜேந்திரன் குடும்பத்திற்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்கப்படவில்லை..இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், குடவாசல் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு மழைவெள்ளத்தை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சரிடம் நேரில் உஷா மனு அளித்துள்ளார். 

கல்யாணசுந்தரம், 18 புதுக்குடி பஞ்சாயத்துக்கு, முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார் மேலும், தற்பொழுது அவரது மகள் திவ்யா திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்