சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி!
குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
க.பொன்முடி
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006 - 2011 வரை திமுக ஆட்சியில் இதே துறையில் அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விழுப்புரம் ஊழல் தடு்ப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ல் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, 2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்தது. அதன் விசாரணையில், , இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மீண்டும் எம்எல்ஏ
சிறை தண்டனை பெற்றதால், பொன்முடி தனது அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்தார். அதன்பின் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த விசாரணையில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியனதை அடுத்து, அதனை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்ட உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும். இதன் மூலம் மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ.ஆகிறார்.