பஸ் ஸ்டாண்டில் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் - சென்னையில் பரபரப்பு
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடியை சேர்ந்த சௌந்திரராஜன் என்பவர் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திமுகவில் 59வது வட்ட செயல் வீரராக இருந்து வந்தார். இதனிடையே கடந்த வாரம் பிராட்வே பஸ் நிலையத்தில் திமுக சார்பில் கடந்த வாரம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சௌந்திரராஜன் செய்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சௌந்திரராஜன் தண்ணீர் பந்தலுக்கு தேவையான தண்ணீர் கேன்களை தனது கடையில் இருந்து கொண்டு சென்றார்.
சிறிது தூரம் சென்ற நிலையில் 4 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சௌந்திரராஜன் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் சுற்றிவளைத்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சௌந்திரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலையை கண்ட பஸ்நிலையத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலை பற்றி தகவல் அறிந்ததும் எஸ்பிளனேடு போலீசார் விரைந்து வந்து சௌந்திரராஜன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இவர் சமீபத்தில் தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து இருக்கிறார். கடந்த வாரம் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக பிராட்வேயை சேர்ந்த அதிமுக பிரமுகருடன் சௌந்திரராஜனுக்கு மோதல் ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.