திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு? மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணனுக்கு முரசொலி பதிலடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பேச்சுக்கு திமுகவின் முரசொலி நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் மாநாடு
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று முன்தினம்(03.01.2025) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திமுக அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுக மீது விமர்சனம்
நிகழ்வில் பேசிய அவர், "தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை முதல்வர் பிரகடனம் செய்துவிட்டாரா?. தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? சீப்பை மறைத்து வைத்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என நினைக்க வேண்டாம். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் போராடுவோம்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஏன் அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது.” என கூறினார்.
கே.பாலகிருஷ்ணனின் பேச்சு குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது. பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம்" என பதிலளித்தார்.
முரசொலியின் பதிலடி
இந்நிலையில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் முதல் பக்கத்திலே கே.பாலகிருஷ்ணனின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான கட்டுரையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை.
‘தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளீர்களா? என்று கேட்டிருக்கிறார்? அவரைப் பேசவிடாமல் தடுத்து உள்ளார்களா? இல்லை.
டிசம்பர் 28 ஆம் தேதியிட்ட ‘தீக்கதிர்’ நாளிதழிலில் ‘வியூகம் வகுக்க விழுப்புரத்தில் சங்கமிப்போம்’ என்று இதே பாலகிருஷ்ணன் 29 பிரிவுகளாக கருத்துகளைச் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிட்டு பாலகிருஷ்ணன் மார்தட்டிக் கொள்கிறார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.?
பாலியல் வன்கொடுமை
இந்தப் போராட்டங்களை தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது உண்மையானால் இந்தப் போராட்டங்களுக்கு அனுமதி அளித்தது எந்த முதலமைச்சர்? இவர் கேள்வி கேட்கிறாரே அதே முதலமைச்சர் தானே அனுமதியும் கொடுத்தார்? அவசர நிலைக் காலத்தில் ஒரு கட்சி இத்தனை போராட்டங்களை நடத்தி இருக்க முடியுமா?
சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, ‘தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை’ என்று ‘ட்ரெண்ட்’ உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
தமிழகத்தில் பட்டியலின அடக்குமுறை அதிகமாக உள்ளது.ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கிறது. பெரியார் கொள்கைகள் திராவிட இயக்க ஆட்சிகளில் நீர்த்துப் போய்விட்டது. நாட்டில் அவசர நிலைப் பிரகடனம். போலீஸ் துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது இப்படி பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்ததை பாலகிருஷ்ணன் சொல்வதற்குக் கிடைக்கும் முக்கியத்துவம் என்பது அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான அழுத்தம் அல்ல.
தோழமைக்கான இலக்கணம் அல்ல
'கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும்' வெளிச்சங்கள் மட்டுமே. இதற்கு தி.மு.க. சார்பில் வரிக்கு வரி பதிலளிப்பது இல்லை. விமர்சிப்பதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அப்படி பதில் அளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்துவிட்டார்கள் போலும்!
எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு எடுத்தெறிந்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுகளும் மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையைச் சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டணியில் சலசலப்பு
சில நாட்களுக்கு முன்னர் அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கப்படுகிறதா எனகே.பாலகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து விளக்கமளித்திருந்தார்.
முன்னதாக திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் திமுக விசிக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அதனையடுத்து ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
தற்போது திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.