ஏன் மசூதிக்கள் எல்லாம் அரசு கட்டுபாட்டில் இல்லையா? உண்மையிலேயே பிரதமரா? - மோடியை சாடிய எம்.பி
பிரதமர் மோடியின் கோவில்கள் குறித்த கருத்திற்கு எம்.பி பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி கருத்து
தெலங்கானா மாநிலம் நிஜ்ஜாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டு தலங்களை தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை.
ஆனால் கோயில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள திமுக எம்.பியும், வஃபு வாரிய உறுப்பினருமான எம்.எம்.அப்துல்லா, இவர் உண்மையிலேயே பிரதமர்தானா? என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது.
எம்.பி பதில்
கோவில்களிலும் கூட சாய்பாபா கோயில்களிலோ மேல்மருவத்தூர் அம்மா, ஜக்கி வாசுதேவ் , காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்டவர்கள் நடத்துகின்ற கோவில்களிலோ அரசு நிர்வாகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பள்ளிவாசல்கள் குறித்து அவர் சொல்லியிருப்பது பச்சை பொய்.
கோயில்களுக்கு இந்து அறநிலையத்துறை போல பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்களுக்கு வஃபு வாரியம் என்ற அரசு துறை உண்டு. இந்து அறநிலையத்துறை அமைச்சர் போல இதற்கும் ஒரு அமைச்சர் உண்டு. வஃபு துறை அமைச்சராக அண்ணன் மஸ்தான் இருக்கிறார்.
இது போக இதற்கென செயலாளராக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரி துவங்கி வாரியத்திற்கு தலைவர் உறுப்பினர்கள் வரை உண்டு. இவர்கள்தான் தமிழகத்தின் அத்தனை பள்ளிவாசல் தர்ஹாக்களை நிர்வகிக்கின்றனர்.மோடி அவர்களே, தமிழக பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள் அத்தனையும் 100% அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது.
ஆட்சி முடியும் இந்த சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாகக் கொள்ளாமல் போகப் போகின்ற நேரத்தில் ஏதேனும் பிரயோஜனமாக செய்து விட்டுப் போக முயலுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.