பிரதமர் மோடி மகாத்மா காந்தி போல தெரியுமா? - சொன்னது திமுக கூட்டணி எம்.பி., தான்
பிரதமர் மோடியையும், மகாத்மா காந்தியையும் ஒப்பிட்டு திமுக கூட்டணி எம்.பி. ஒருவர் புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டெல்லியில் உள்ள புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது.
அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக கூட்டணி எம்.பி.யான பாரிவேந்தர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடல்நிலை சார்ந்த பிரச்சனை காரணமாக தொகுதி பக்கம் எட்டிப்பார்க்காத பாரிவேந்தர், இனி வரும் எந்த தேர்தலிலும் இந்திய ஜனநாயக கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது சமீபத்தில் தெரிவித்திருந்தார். யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை என அவர் கூறினார்.
இந்நிலையில் திருச்சியில் புத்தூர் பகுதியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலகத்தை, அச்சங்கத்தின் நிறுவனத் தலைவரும், டாக்டர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நம் இந்திய பிரதமர் மோடி மகாத்மா காந்தியை போன்றவர் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார் என்றும் புகழ்ந்தார்.
மேலும் தமிழகத்தில் அவருக்கு எதிராக தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொண்டு அவரை நேசிப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள்.இந்தியாவின் பெருமையை பாதுகாக்க, நாட்டுப்பற்றுக் கொண்டு, நாட்டுக்காக உழைத்து வரும் பெருமகன் மோடி எனவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு, பாஜகவுடன் கூட்டணி வைக்க, ஐஜேகே இப்போதே தயாராகிவிட்டதோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.