விழா மேடையில் கண்கலங்கிய கனிமொழி - நெகிழ்ச்சியடைந்த திமுக தொண்டர்கள்
‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா மேடையில் கனிமொழி எம்.பி., கண் கலங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாழ்க்கை வரலாறு குறித்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன் "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதன் முதல் பாகத்தின் வெளியீட்டு விழா நேற்று நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி , ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
"உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வெளியிட திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய கனிமொழி எம்.பி., "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி" என்ற திருக்குறளுடன் சிறிய கதை ஒன்றை சொன்னார். அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியைப் பற்றி இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லை என்று சொன்ன போது கனிமொழியின் குரல் தழுதழுத்தது.
மேலும் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகம் போல இந்த புத்தகம் இருக்கும் என்றும், பிறப்பு முதல் மிசா கைதி வரை நீளும் இந்த புத்தகம் ஒரு அரசியல் ஆவணம் என்றும் அவர் கூறினார்.