ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்து மாட்டிக் கொண்ட திமுக எம்.பி - வீடியோவால் சிக்கினார்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே போல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை என அனைத்தும் நிறைவுற்ற நிலையில் தற்போது தீவிரமான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது .
வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பணம்பட்டுவாடா முறைகேடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.பி ஏ.கே.பி சின்ராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது திருச்செங்கோடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தார்கள்.
ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அவர் அதை தனது உதவியாளரிடம் கொடுத்து, பெண்களுக்கு கொடுக்க சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் ஆர்த்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியது, சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது எனப் பலர் மாட்டிக் கொண்டு வருகிறார்கள்.