ஆதிக்க ஜாதி பெண்களை காதல் திருமணம் செய்தால் பணம் தருவோம் என்கிறதா தி.மு.க. தேர்தல் அறிக்கை?

election women dmk statement
By Jon Mar 22, 2021 01:30 PM GMT
Report

ஆதிக்க ஜாதியினரின் வீட்டில் உள்ள பெண்களை ஆதி திராவிட ஆண்கள் காதலித்துத் திருமணம் செய்தால் அறுபதாயிரம் ரூபாய் அளிப்பதாக தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆதிக்க ஜாதியினரின் வீட்டில் உள்ள பெண்களை ஆதி திராவிட ஆண்கள் காதலித்துத் திருமணம் செய்தால் அறுபதாயிரம் ரூபாய் அளிப்பதாக தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருப்பதாகவும் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டுமென்றும் கடந்த சிலநாட்களாக வாட்ஸப்பிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வலம் வருகின்றன.

உண்மை என்ன? சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அறிக்கை வெளியான சில நாட்களில், அந்த அறிக்கையில் இருந்த வெவ்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கலப்பு மணம் குறித்து தி.மு.க. அளித்திருப்பதாகக் கூறப்படும் வாக்குறுதி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"திமுக தேர்தல் அறிக்கையில் விபரீத வாக்குறுதி" என தலைப்பிட்டு, "முதலியார், பிராமணர், நாயுடு, வன்னியர், யாதவர், நாடார், அகமுடையார், ரெட்டியார், பிள்ளை, கள்ளர், மறவர், கொங்கு வெள்ளாளர், செட்டியார், முத்தரையர் உள்ளிட்ட எந்தவொரு சாதியை சேர்ந்த பெண்ணை, ஆதி திராவிடர் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டால் - ரூ. 60,000 பணம் மற்றும் 1 பவுன் தங்க காசு பரிசு என திமுக தேர்தல் அறிக்கையின் 259-ஆவது வாக்குறுதியாக கூறப்பட்டுள்ளது! தேவையா இது" என வாட்ஸப்பிலும் ட்விட்டரிலும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இது தவிர, இதே செய்தியை பெண் ஒருவர் கூறுவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன? தி.மு.க. தேர்தல் அறிக்கையின் 73வது பக்கத்தில் 259வது வாக்குறுதியாக திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் பெயர் "அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்". இந்தத் தலைப்பின் கீழ், "கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான சாதி இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில் தி.மு.க.

ஆட்சிக் காலத்தில் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டச அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும். கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதி திராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்துகொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் இந்தத் திட்டம் 1989 -91 காலகட்டத்தில் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட மிகப் பழைய திட்டம். இந்தத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்த நிலையில், 2011ல் முதலமைச்சரான ஜெயலலிதா, இந்தத் திட்டத்தின் பெயரை டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என்ற பெயரை மாற்றினார். இந்தத் திட்டம் இரண்டு விதமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, தம்பதிகளில் ஒருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் அவர்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. மணமக்களில் ஒருவர் ஆதி திராவிடராக இருந்தால் முப்பதாயிரம் ரூபாய் பணமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தற்போது மாவட்ட மட்டத்தில், அந்தந்த மாவட்டத்தின் சமூக நல அலுவலரினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தின் பெயரை மீண்டும் அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என பெயர் மாற்றப்படும் என்று சொல்லியருப்பதோடு, உதவித் தொகையையும் இரு மடங்காக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தி.மு.க. மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலன்" என்ற பகுதியின் கீழ், பக்கம் 33ல் பின்வருமாறு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது:

"சாதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் முன்னுரிமை இருப்பதைப்போல வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

இது தவிர 2013ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு Dr Ambedkar scheme for social Integration through inter caste marriage என்ற பெயரில் கலப்பு மணத்தை ஊக்குவிக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி கலப்பு மணம் செய்யும் தம்பதிகளில் ஒருவர் ஆதிதிராவிடராக இருந்தால் 2. 5 லட்ச ரூபாய் நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

ஆனால், நாடு முழுவதும் வருடத்திற்கு 500 பேருக்குத்தான் இந்த நிதி உதவி வழங்கப்படும். ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் இது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை. ஏற்கனவே இருக்கும் திட்டத்தின் பெயர் மாற்றப்படும் என்றும் கூடுதல் நிதி தரப்படுமென்று மட்டுமே தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. Bbc Tamil