காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த தளபதி - என்ன காரணம்?
திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும், காங்கிரஸில் ஒரு தரப்பு தவெக கூட்டணிக்கு செல்ல விரும்புகிறது.
சில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த முறை அதிக தொகுதிகளை பெற வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றன. இதனால், திமுகவினர் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த சூழலில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி காங்கிரஸ் குறித்து பேசிய பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய கோ.தளபதி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் எம்.பி ஆகிவிட்டார்கள். இனிமேல் யார் எம்.எல்.ஏ ஆனால் என்ன என்ற கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லை.
அதுல பங்கு வேண்டும் இதுல பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த முறை சீட் வழங்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு 3000 வாக்குகள் தான் உள்ளது. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லை." என பேசினார்.
என்ன காரணம்?
கோ.தளபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
22 ஆண்டுகளாக நண்பர்கள் ,ஆன வெற்றிக்கு பிறகு பங்கு என கூறினால் எப்படி இப்படி தரம்தாழ்ந்து தளபதி அவர்கள் பேசுகிறார்? .
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 26, 2026
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு நன்றிகள்.
நாட்டை காக்க சங்கிகளை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் கொண்ட நாம் என்று வெல்வோம். https://t.co/P7UararCq3
காங்கிரஸ் தரப்பில் இந்த முறை மதுரை வடக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு சீட் மறுக்கப்படும் என்ற ஆத்திரத்தில் காங்கிரஸ் மற்றும் எம்பிக்களை கோ.தளபதி விமர்சித்ததாக கூறப்படுகிறது.