இனி தர்மபுரி மாவட்டத்தை யாரும் “வீக்” என்று சொல்லக்கூடாது’ - மு.க.ஸ்டாலின் பேச்சு

dmk mkstalin dharmapuri pazhaniyappan
By Thahir Dec 05, 2021 07:11 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகளை சேர்ந்த இரண்டாயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று நடைபெற்றது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

பல்வேறு கட்சியியை சேர்ந்தவர்களை வரவேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“பழனியப்பன் அவர்கள் இங்கு உரையாற்றுகிறபோது தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் லேட்டாக வந்தார் அவ்வளவுதான்.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அமைச்சரவையில் அரசினுடைய திட்டங்கள், மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள், மக்களுக்குச் சொல்ல வேண்டிய செய்திகள், சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் - அதை மட்டும் பேசி மற்ற எந்தப் பிரச்சனையும் உருவாக்காத அமைச்சர்கள் இருந்தார்கள்.

அதை நான் இல்லை என்று மறுக்கவில்லை. அதில் முதல் ஆள் யார் என்றால், பழனியப்பன் அவர்கள்தான்.

மேலும், பழனியப்பனை நம்பி, அவரிடத்தில் எவ்வாறு விசுவாசமாக, அவரோடு இணைந்து பணியாற்றிக் இருக்கிறீர்களோ, “அதே விசுவாசத்தோடு நாங்களும் வருகிறோம், அவரோடு சேர்ந்து பணியாற்ற நாங்களும் காத்திருக்கிறோம்” என்ற உணர்வோடு, இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள்.

அவ்வாறு வந்திருக்கின்ற அவரை மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து உங்களையும் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன்.

தர்மபுரி மாவட்டம் “வீக் வீக்” என்பார்கள். இனிமேல் தர்மபுரி மாவட்டத்தை யாரும் வீக் என்று சொல்லக்கூடாது. இனிமேல் யாரும் அவ்வாறு சொல்லவும் மாட்டார்கள்; அவ்வாறு சொல்லவும் முடியாது.

ஏனென்றால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. எனவே அந்த மாறி இருக்கும் நிலைமையை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்” என பேசினார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசிய பழனியப்பன், ஜூலை மாதம் திமுகவில் இணைய நான் நினைந்தேன் அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திலிருந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர், இதில் அதிமுக, பாமக, தேமுதிக, விசிக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் உள்ளதாக கூறினார்.