முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்.. திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு - பாஜக பதிலடி!
முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று பள்ளி நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திமுக அமைச்சர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர்,'' தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. எந்தெந்த பள்ளிகளில் அடிப்படை வசதி தேவையோ உடனடியாக திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. எனவே மாணவ மாணவிகள் அரசும் தரும் திட்டங்களைப் பயன்படுத்தி நன்றாகப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,'' முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் , புண்ணியம் செய்து இருந்தால் பெண் பிள்ளைகள் பிறக்கும் என்று கூறினார். இவரது பேச்சு தற்பொழுது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜக
இந்த நிலையில் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்த நாராயணன் திருப்பதி,முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்கிறார் அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள். ஆண்களாய் பிறப்பது பாவமா? இது மூட நம்பிக்கை பேச்சு இல்லையா?
அரசு பள்ளியில் இப்படி பேசியதால் தானே மகா விஷ்ணுவை கைது செய்து நடவடிக்கை எடுத்தீர்கள். உங்கள் ஏரியாவில் வந்து இப்படிப் பேசிவிட்டுச் சென்றிருக்கிற இந்த அமைச்சரைச் சும்மா விடுவீர்களா? கைது செய்ய வேண்டும் என வற்புறுத்த மாட்டீர்களா அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.