குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் பாஜக வெற்றி பெறாது - அமைச்சர் ராஜகண்ணப்பன்!
திமுகவை அழிக்க முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாகத் தெரியும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராஜகண்ணப்பன்
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மகன் ஆவார். இந்நிலையில் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாவட்டம் சாய்நாதபுரத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று உதயசூரியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் "பிரதமர் மோடி இந்திய நாட்டின் ஆட்சி முறையை மாற்றி ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வர நினைக்கிறார்.
வெற்றி பெறமுடியாது
ஒரு கட்சி ஆட்சி முறையின் மூலம் பிரதமர் தன்னை அதிபராக்கிக்கொள்ள நினைக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும், குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் பாஜகவால் வெற்றி பெறமுடியாது.
தமிழகத்தில் அதிமுகவை அழித்து பாஜக 2026-ம் ஆண்டில் பிரதான எதிர்க்கட்சியாக முயல்கிறது. ஆனால் திமுகவை அழிக்க முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாகத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.