கழகத்திற்காக நாங்கள் இல்லை...எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் இருக்கிறோம் - கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
கழகத்திற்காக நாங்கள் இல்லை…எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் கழகத்தில் இருக்கிறோம் என திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஓட்டியுள்ள சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கம்
அண்மை நாட்களாக தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது என்று தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் நேற்று பால்வளத்துறை அமைச்சராக இருந்து வந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாகவும் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு எந்ததெந்த துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்ற உத்தேச பட்டியலை பார்க்கலாம்.
அமைச்சராகும் டிஆர்பி ராஜா
தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு - நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை துறை வழங்கப்படலாம் என்றும், இவருக்கு நிதித்துறையை வழங்க சில மூத்த அமைச்சர்கள் ஆதரவு கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை துறையை கவனித்து வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் - பால்வளத்துறை அமைச்சராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் தென்னரசு கவனித்து வரும் தொழில்துறை டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்டரால் கிளம்பும் உள்கட்சி பூசல்
இந்த நிலையில் டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரில் திருவாரூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றி கழகத்திற்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்களுக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும்.
இந்த போஸ்டரை பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர்களே அதிகளவில் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதில், "நேற்று அப்பாவிடம் கழக உறுப்பினர்கள்: நம் மாவட்ட கழகத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் இஷ்டப்பட்டு செய்றீங்க! எவ்வளவு செலவு? போராட்டம், ஜெயில் ஆனால் அங்கீகாரம் வேறொருவருக்கா?
அப்பாவின் பதில்: நம் வீட்டிற்கு வேலி நான் கட்டாமல் வேறு யாரு கட்டுவாங்க னு நினைத்து கொண்டு இருக்கமுடியும் என்றார்.
நம் மாவட்ட கழகத்தை தன் வீடாக நினைக்கும் இவர் மனதிற்கு நல்லதே நடக்கும். நீங்கள் என் இணையற்ற ஹீரோ." என்று குறிப்பிட்டு உள்ளார்.