என்னதான் கதறினாலும் கலைஞரின் புகழை மறைத்திட முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Aug 04, 2022 06:59 AM GMT
Report

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

என்னதான் கதறினாலும்  கலைஞரின் புகழை  மறைத்திட முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின் | Dmk Members A Letter Tamil Nadu Cm Stalin

நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கும் முழுப் பேராற்றலாக விளங்கும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள்.

நம்மை அவர் விட்டுச் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என நினைத்தபோது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது. அவரா? நம்மை விட்டுப் பிரிவதா? கணப் போதும் அகலாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து, நம்மை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருப்பவரே முத்தமிழறிஞர் கலைஞர்தானே என்று நினைத்ததும், நின்றுபோன இதயம் அடுத்த நொடியிலிருந்து மீண்டும் துடித்தது.

நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார்

ஆம்.. தலைவர் கலைஞர்தான் ஒவ்வொரு நொடியும் நம் நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார். நமக்கு நிழல் தரும் பசுஞ்சோலையாக விரிந்து நிற்கிறார். உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது ஆட்சியின் மகத்தான இயங்கு சக்தியாக விளங்குகிறார்.

பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு கழகத்தின் சார்பில் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்புடன் அமைதிப் பேரணி நடத்தி அதனை வழிநடத்திச் செல்வது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் வழக்கம்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் இதனைத் தலைவர் கலைஞர் கடைப்பிடித்தார். அண்ணா வழியில் அன்றாடம் பயணித்த தலைவர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில், வங்கக் கடற்கரையில் தனது தங்கத் தலைவர் பேரறிஞர் அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே நிரந்தர ஓய்வு கொள்ளும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திற்கு அவரது முதலாமாண்டு நினைவு நாளில் உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கொரோனா கால நடைமுறைகள் காரணமாக நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அந்தத் திருவுருவச் சிலையிலிருந்து தொடங்கி, பேரறிஞர் அண்ணா துயிலுமிடம் அருகே தலைவர் கலைஞர் ஓய்வெடுக்கும் நினைவிடம் வரை ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.

கலைஞரின் புகழினை மறைக்க முடியாது

தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும் – மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும்.

கடல் அலை போல எழும் "வாழ்க வாழ்க வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே" என்ற முழக்கம், வானம் அதிரும் வகையில் ஒலிக்கட்டும்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.