விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக பிரமுகர் குத்திக்கொலை
கோவில் கொடை விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக வட்ட செயலாளர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரத்தை சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலரான மனோகரன் என்பவரது மகன் நடராஜன் 45-வது வட்ட திமுக செயலாளராக உள்ளார். இவர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இதனிடையே சண்முகபுரத்தில் உள்ள முனியசாமி கோவில் கொடைவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சில வாலிபர்கள் சமூகஇடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றதாகவும், அதில் ஒருவர் போதையில் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. இதைப்பார்த்த நடராஜன் அவர்களை கண்டித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக அதே பகுதியை சேர்ந்த தங்க கார்த்திக் என்பவர் தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த பெரியவர்கள் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடை விழா முடிந்து இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்ட நடராஜன் ராமசாமிபுரத்தில் உள்ள தனது ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு சென்றார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த தங்க கார்த்திக், எப்படி என்னை கண்டிக்கலாம் என கூறி தகராறில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த தங்க கார்த்திக், அவரது நண்பர்களான அருண்குமார் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் அரிவாளால் சரமாரியாக நடராஜனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நடராஜனை மீட்ட அக்கம் பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் கொண்ட கும்பல் நடராஜனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தங்ககார்த்திக், அருண்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தங்க கார்த்திக் மீது தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.