இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு...திமுக பிரமுகர் தற்கொலை...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தங்கவேல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் (வயது 84), தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், சேலம் மாவட்டம் தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு.தங்கவேல் அவர்கள்,இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார்.இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தங்கவேலுவுக்கு வீரவணக்கம்!
இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக – ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம்.
இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்!’ என தெரிவித்துள்ளார்.